பிக்பாஸ் போட்டியில் சஜீத்கான் என்ற நடிகர் தொடரக் கூடாது என புகார் அளித்ததைத் தொடர்ந்து பலாத்காரம் செய்துவிடுவோம் என இன்ஸ்டாகிராமில் மகளிர் ஆணையத் தலைவிக்கு மிரட்டல் வந்துள்ளது.
பிக்பாஸ் 16 ஹிந்தி மொழியில் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகின்றார். இந்த நிகழ்ச்சி கடந்த வாரம் தொடங்கியது. இதில் சஜீத்கான் என்ற நடிகரும் போட்டியாளராக உள்ளார். பாலியல் குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய இவரை இப்போட்டியில் இருந்து நீக்க வேண்டும் என மகளிர் ஆணையத் தலைவி , மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ராகுல் மற்றும் ஹிருத்திக் ஷெல்டேக்கர் என்ற பெயர்களில் இருந்து மிரட்டல் வந்துள்ளது. அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து தனது சமூக வலைத்தல பக்கத்தில் தேசிய மகளிர் ஆணையத் தலைவி மலிவால் பகிர்ந்துள்ளார்.இது தொடர்பாக காவல்நிலையத்திலும் அவர் புகார் அளித்துள்ளார்.
பிக்பாஸில் இருந்து சஜித்கானை நீக்கக் கோரி அமைச்சருக்கு கடிதம் எழுதியதில் இருந்து பலாத்கார மிரட்டல்கள் வருவதாக தெரிவித்துள்ளார்.அவர்கள் எங்கள் வேலையை நிறுத்த விரும்புகின்றார்கள் என்பது எனக்கு தெளிவாக புரிகின்றது. டெல்லி போலீசில் புகார் அளித்ததை அடுத்து எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணைநடத்தி சம்மந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
மீடூ பிரசாரத்தின் போது பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சஜீத்கான் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டினர். இந்த புகார்கள் சஜித்தின் மோசமான மனநிலையை காட்டுவதாக தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட ஒருவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம் கொடுத்து அவரை புகழடைய வைக்க பிக்பாஸ் முயலக்கூடாது. இந்நிகழ்ச்சியில் இருந்து சஜீத் கானை நீக்குமாறு அனுராக் தாக்கூருக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.
இதே போல பாடகி சோனா மொகபத்ரா மற்றும் நடிகை மந்தனா கரிமி ஆகியோரும் சஜீத்கான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் அனுமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.