கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த 33 வயது பெண்ணுக்கு திருமணமான நிலையில், கேட்டரிங் வேலை செய்து வருகிறார். இவர், வியாழக்கிழமை அன்று அங்குள்ள கோரமங்கலா பகுதியில் உள்ள ஜோதி நிவாஸ் கல்லூரி அருகே இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 20 வயது மதிக்கத்தக்க 4 இளைஞர்கள், அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்துள்ளனர். பின்னர், நட்பாக பேசி இரவு விருந்துக்கு ஹோட்டலுக்கு அழைத்துள்ளனர்.
இதையடுத்து, அந்த பெண்ணும் அவர்களுடன் சென்று சாப்பிட்டுள்ளார். பின்னர், அவரை ஹோட்டலின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இரவு முழுவதுமே அவர்கள் 4 பேரும் மாறி மாறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், இதை வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மறுநாள் விடிந்ததும் அந்தப் பெண்ணை விடுவித்துள்ளனர். பின்னர், வீட்டிற்கு வந்த அந்தப் பெண், தனக்கு நேர்ந்த கொடுமையை கணவரிடம் கூறி அழுதுள்ளார். அவர், உடனே தனது மனைவியை அழைத்துக் கொண்டு கோரமங்கலா காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், பெண்ணை பலாத்காரம் செய்த 4 பேரையும் அடையாளம் கண்டு, அதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஒரு இளைஞரை வலைவீசி தேடி வருகின்றனர். அந்த 4 இளைஞர்களும் ஹோட்டல்களில் வேலை செய்வதாகவும், அனைவரும் வேற்று மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், வேறு ஏதாவது பெண்களிடம் இதுமாதிரி செய்துள்ளார்களா..? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.