பொதுவாக தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒவ்வொரு கோயிலுக்கும், ஒரு தனி சிறப்பும், வரலாறும் பெற்றுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள சிவன் கோயில் ஒன்று உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் என்றதும் அனைவருக்கும் ஆண்டாள் கோவில் தான் ஞாபகம் வரும். ஆனால் இங்கு மடவார் வளாகம் என்ற கோவில் இருக்கும் நிலையில் அதன் சிறப்புகளை பார்ப்போம். மிகப்பெரும் சைவத்தலமான இக்கோயில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டத்திலேயே மிகப்பெரும் சிவ தலமாக இக்கோயில் கருதப்பட்டு வருகிறது. சிவனின் திருவிளையாடல்களில் 24 வகையான திருவிளையாடல்கள் இக்கோயிலில் நடத்தப்பட்டுள்ளது என்பது தனிச் சிறப்பாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் முதல் மூன்று நாள்கள் காலை சூரியனின் கதிர்கள் மூலவரின் மீது படும் சிறப்புடையது.
மேலும் மன்னர் திருமலை நாயக்கர், தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டபோது பல மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் வயிற்று வலி தீரவில்லை. பின்னர் இக்கோயிலுக்கு வந்து சிவனை மனதார வேண்டி பிரசாதம் அருந்திய பிறகு தீராத வயிற்று வலியும் தீர்ந்துள்ளது. இதனால் வைத்தியநாதசுவாமி கோயிலின் மணியோசை கேட்ட பின்பு தான் மன்னர் திருமலை நாயக்கர் உணவருந்தி வந்துள்ளார் என்று கூறபட்டு வருகிறது.
இதனாலேயே தீராத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த திருத்தலத்திற்கு வந்து தீர்த்தத்தில் நீராடி வைத்தியநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்து பரிகாரம் செய்து வந்தால் நோய் உடனே குணமாகும். கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக அவதியுற்று வருபவர்கள் இக்கோயிலில் அமைந்துள்ள ஜுரஹருக்கு பரிகாரம் செய்து வந்தால் காய்ச்சல் சரியாகும் என்று நம்பப்பட்டு வருகிறது.
கோவில் அமைப்பு : ஐந்து நிலைகளைக் கொண்ட கோபுரம். மூன்று வாயில்கள். வைத்தியநாத சுவாமி மற்றும் சிவகாமி அம்பாள் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மூலவர் சன்னதி. விநாயகர், சுப்ரமணியர், துர்க்கை, சண்டிகேஸ்வரி போன்ற பிற தெய்வங்களுக்கும் சன்னதிகள் உள்ளன.