பொதுவாக நம்மை தாக்கி மரணத்தை கூட விளைவிக்கக்கூடிய விஷங்கள் தான், நம்மை காப்பாற்றுவதற்கான மருந்தாகவும் செயல்படுகிறது. இதனால் தான், சில அரிய வகை மருந்துகள் மிகவும் விலையுயர்ந்தவையாக இருக்கின்றன. இதற்கு சரியான உதாரணம் பாம்பு தான், அதன் விஷம் பட்டால் எவ்வளவு கொடியதோ. அதே போல் அந்த விஷத்தை முறிக்கும் மருந்தாகவும் அதே விஷம் தான் பயன்படுத்தப்படுகிறது என்பது தான் உண்மை, அதனால் தான் பாம்பின் விஷம் மிகவும் விலை உயர்ந்ததாக விற்கப்படுகிறது.
ஆனால் இந்த பாம்பு விசத்தைவிட விலை அதிகமாக விற்கப்படுவது தேளின் விஷம் தான் என்பது உங்களுக்கு தெரியுமா..? ஆம் உண்மையில் தேள் (Scorpion) விஷம் தான் உலகிலேயே விலை உயர்ந்த திரவத்தில் முதலிடமாக உள்ளது. தேளின்விஷம் சர்வதேச சந்தையில் ஒரு லிட்டர் (ஒரு கலன்) 10 மில்லியன் டாலர்களுக்கு மேல் மதிப்புள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 85 கோடி ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தேள் விஷத்திற்கு இவ்வளவு விலை இருப்பதற்கு முக்கிய காரணம் இதில் காணப்படும் மருத்துவ குணங்கள் நிறைந்த புரதங்கள். அதே சமயம் இந்த விஷத்தை பெறுவது மிகவும் கடினம், ஒரு தேளில் இருந்து ஒரு முறைக்கு தோராயமாக 2 மில்லி லிட்டர் விஷம் தான் எடுக்கப்படுகிறது. இந்த ஒரு கேலன் பெற அந்த தேளிடம் இருந்து 2.64 மில்லியன் முறை விஷத்தை எடுக்கவேண்டும் என தகவல் கூறப்படுகிறது. மேலும் சர்க்கரையின் ஒரு தானியத்தை விடவும் அளவில் சிறியதாக இருக்கும் இதன் ஒரு துளி விஷமே 130 டாலர்களுக்கு விற்கப்படுகிறது.
ஒரு தேள் நியூரோடாக்சின்கள், கார்டியோடாக்சின்கள், நெஃப்ரோடாக்சின்கள், ஹீமோலிடிக் டாக்சின், ஹிஸ்டமைன் போன்ற பல்வேறு இரசாயனங்கள் உட்பட டஜன் கணக்கான தனிப்பட்ட நச்சுகளுடன் விஷத்தை உருவாக்கும் திறன் கொண்டது.
தேள் விஷத்தின் பயன்கள்: நோய் எதிர்ப்பு மருந்துகள், அழகு சாதனப் பொருட்களுக்கு இது பயன்படுத்தப்படுகிறது. மேலும் வலி நிவாரணிகள் போன்றவற்றை உருவாக்க தேள் நஞ்சு பயன்படுகிறது. மூளைக்கட்டி (Brain Tumor) நோயை சரி செய்ய இது சிறந்த மருந்து என்று கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் ஒரு சில புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுவது மட்டுமல்லாமல் புற்று நோய் எந்த இடத்தில், என்ன அளவில் இருக்கிறது என்பதை கண்டறியவும் உதவுகிறது.
அப்போ உடனே அருகில் இருக்கும் தேளை கண்டுபிடித்து விஷத்தை எடுத்து நாமும் லைப் டைம் செட்டில்மென்ட் பெறலாம் என்றால் அதான் இல்லை, தேள்கள் அவ்வளவு எளிதில் விஷத்தை வெளியிடுவதில்லை. ஒருமுறை கொட்டும் பொழுது எவ்வளவு விஷத்தை வெளியிட வேண்டும் என்பதை கட்டுப்படுத்தும் சக்தி கொண்டது தேள்கள். ஏனென்றால் மிகவும் சிக்கலான அதனுடைய விஷத்தை உற்பத்தி செய்வதற்கு அதனுடைய உடலில் இருந்து தேவைப்படக்கூடிய ஆற்றலை அதிகம் எடுத்துக்கொள்வதால் எளிதில் தன்னுடைய விஷத்தை அது பயன்படுத்துவதில்லை. அப்படி ஒரு முறை விஷம் எடுத்தால் கூட 2 மில்லி லிட்டர் விஷம் தான் கிடைக்குமாம்.