தமிழ்நாட்டில் பத்திரப்பதிவுக்கு வரும் பொதுமக்களுக்கான சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் போலி பத்திரங்களை தடுக்கும் வகையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக சமீபத்தில், பத்திரப்பதிவு கட்டணத்தை டபுள் மடங்காக உயர்த்தியிருந்தது. இது பொதுமக்கள் தரப்பில் அதிருப்தியை தந்து வரும் நிலையில், கட்டுமான பணிகளுக்கான பத்திரப்பதிவு கட்டணம் 9% வசூல் செய்யப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ரூ. 25 லட்சம் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு அதிகபட்சமாக 1.15 லட்சம் வரை பதிவு கட்டணம் வசூல் செய்யப்பட்ட நிலையில், இனி ரூ.2.25 லட்சம் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குபவர்களுக்கு பதிவு கட்டணம் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. இது நடுத்தர மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வெடித்து கிளம்பி உள்ளது.
இதுதொடர்பாக கிரெடாய் (சென்னை) தலைவர் எஸ்.சிவகுருநாதன் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், “இந்த கட்டண உயர்வால், சொந்தமாக வீடு வாங்க நினைப்பவர்களை அதிர்ச்சியில் உள்ளனர். இதனால், பத்திரப்பதிவு குறையும். பதிவுத்துறைக்கு வருவாய் இழப்பும் ஏற்படும். கட்டுமான நிறுவனங்களும் பாதிக்கப்படும். ஒரு புதிய நடைமுறையை அமல்படுத்தும்போது, காலஅவகாசம் தரவேண்டும். ஆனால், உடனே அடுத்த நடைமுறை வந்துள்ளது. எப்படி உடனே ரூ.2 லட்சம், ரூ.3 லட்சம் பணத்தை புரட்ட முடியும். பத்திரப்பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது அதிருப்தியை தந்துள்ளது” என்றார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பு கடுமையாக உயர்த்தப்பட்டது. அதன்பிறகு, 20 வகையான சேவைகளின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. அரசின் வருவாயை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அப்பாவி மக்களை கசக்கிப் பிழிவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, வீட்டுக்கடனுக்கான வட்டி கடுமையாக உயர்ந்திருப்பதால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வீடு வாங்குவது பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது பதிவுக் கட்டணமும் இரண்டு மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது பரவலான அதிருப்தியை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறது. இதையடுத்து, பத்திரப்பதிவு துறை, இந்த கட்டண உயர்வை வாபஸ் பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.