18 வயதுக்கு மேற்பட்டோர் புதிய வாக்காளர் அட்டை பதிவு செய்வதற்கு ஆதார் இணைப்பது கட்டாயம் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. புதிய வாக்காளர் அட்டைக்கு பதிவு செய்யும்போது, தனிப்பட்ட அடையாளத்திற்காக மட்டுமே ஆதார் கேட்கப்பட்டதாகவும் அதற்காக ஆதார் இல்லாமல் வாக்காளர் அட்டை வழங்க முடியாது என்று அர்த்தம் இல்லை என்றும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
முன்னதாக, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த உறுப்பினர் டெரக் ஓ பிரைன் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு என்பது மத்திய அரசால் கட்டாயமாக்கப்படவில்லை என தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே பழைய வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கும் நபர், புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு பதிவு செய்யும் பட்சத்தில் ஆதார் இணைக்கப்பட்டு இருந்தால் அதிகாரிகளால் எளிதில் கண்டறிய முடியும் என்ற நோக்கத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருவதாகவும், நிதி உதவி, மானியங்கள், பலன்கள் மற்றும் சேவைகளை பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.