இந்திய அரசாங்கத்தால், அங்கீகரிக்கப்பட்ட 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் செல்லாது என மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் இருக்கிறது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை வெளியிட்ட போதும், 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற பொய்யான தகவல்கள் பரவி வருகிறது. இன்றளவும் பல கிராம பகுதிகளில் உள்ள கடைகளில் 10, 20 ரூபாய் நாணயங்கள் வாங்குவதில்லை. ஆனால், இவ்வாறு அரசு அங்கீகரித்த நாணயத்தை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றமாகும்.
ரூ.10, ரூ.20 நாணயங்கள் செல்லும்
இதற்கிடையே, இன்றளவும் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் மற்றும் நோட்டுகள் அச்சிடப்பட்டு நாட்டில் புழக்கத்தில் விடப்படுவதாக நிதியமைச்சகம் கூட தெரிவித்துள்ளது. 2024 டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் 79,502 லட்சம் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இருப்பதாகவும், அதன் மதிப்பு ரூ.7950 கோடி என்றும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
வதந்திகளை நம்ப வேண்டாம்
அதேபோல், 20 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், நாட்டில் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் குறைவாகவே காணப்பட்டாலும், இன்னும் புழக்கத்தில் இருப்பதாக நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், அதனை திரும்பப் பெறப்போவதாக வெளிவரும் செய்திகள் தவறானவை என்றும் தெரிவித்துள்ளது.
நாணயங்கள் நீண்ட காலத்திற்கு புழக்கத்தில் இருக்கும் என்பதால், பல்வேறு வடிவங்களும் கொண்ட நாணயங்கள், ஒரே நேரத்தில் புழக்கத்தில் இருப்பது இயல்பானது. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரூ.10 நாணயத்தை முதன் முதலில் 2005-ஆம் ஆண்டிலும், ரூ.20 நாணயத்தை 2020-ஆம் ஆண்டிலும் ரிசர்வ் வங்கி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
Read More : “இதை நினைச்சா எனக்கு ரொம்ப வேதனையா இருக்கு”..!! மக்களவையில் ஆதங்கத்தை கொட்டிய ராகுல் காந்தி..!!