2022, 2023ஆம் ஆண்டுகளுக்கான இலக்கியமாமணி விருதுகளை தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் அறிஞர் பெருமக்களுக்குத் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் பல்வேறு விருதுகளையும், சிறப்புகளையும் வழங்கி அவர்தம் புலமைக்கும் தொண்டுக்கும் பெருமை சேர்த்து வருகிறது. அந்தவகையில், மரபுத்தமிழ், ஆய்வுத்தமிழ், படைப்புத் தமிழ் ஆகிய வகைப்பாட்டில் 3 அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் உயரிய விருதான இலக்கியமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. மேலும், விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.5 லட்சத்திற்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.
இலக்கியமாமணி விருது 2022ஆம் ஆண்டிற்கு கள்ளக்குறிச்சியை அரங்க இராமலிங்கம் (மரபுத்தமிழ்), விருதுநகரை சேர்ந்த கொ.மா.கோதண்டம் (ஆய்வுத்தமிழ்), கோவையை சேர்ந்த சூர்யகாந்தன் (மா.மருதாச்சலம்) – (படைப்புத்தமிழ்) ஆகியோர் தேர்வு தேர்வாகியுள்ளனர். கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நேர்வாக நீலகிரியை சேர்ந்த மணி அர்ஜுனன் (மரபுத்தமிழ்), திருவாரூரை சேர்ந்த அர. திருவிடம் (ஆய்வுத்தமிழ்), சென்னையை சேர்ந்த க. பூரணச்சந்திரன் (படைப்புத்தமிழ்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2023ஆம் ஆண்டிற்கு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஞா. மாணிக்கவாசகன் (மரபுத்தமிழ்), நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர் சண்முகசுந்தரம் (ஆய்வுத்தமிழ்), சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் இலக்கியா நடராசன் (எ) ச. நடராசன் (படைப்புத்தமிழ்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.