உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் 22 வயது இளைஞர். இவரும் 20 வயது இளம்பெண்ணும் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தான் இளம்பெண்ணின் குடும்பத்தின் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த இளைஞர் மீது திருமணத்துக்கு வற்புறுத்தி பெண்ணை கடத்துதல் உள்பட சில பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து அந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அந்த ஜோடி, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதிகள் ராகுல் சதுர்வேதி மற்றும் முகமட் அசார் ஹுசைன் இத்ரிசி விசாரித்தனர்.
அப்போது இளம்பெண் சார்பில், ”எனக்கு 20 வயது ஆகிறது. நான் எனது எதிர்காலத்தை தீர்மானித்து கொள்ள சட்டம் அனுமதி அளிக்கிறது. இதனால் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். அதோடு என் ஜோடியின் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். ஏனென்றால் என் தந்தை போலீசில் எதுவும் புகார் அளிக்கவில்லை” என வாதிடப்பட்டது.
மாறாக இளம்பெண்ணின் குடும்பத்தின் சார்பில், ”தற்போது உறவில் உள்ள அந்த இளைஞர் ஒரு ரோட் ரோமியோ. அவர் மீது ஏற்கனவே குண்டர் சட்ட பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருடன் வாழ்வதால் எங்கள் வீட்டு பிள்ளைக்கு நல்ல எதிர்காலம் அமையாது” என வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் கூறியதாவது; உச்சநீதிமன்றம் பல லிவ் இன் ரிலேசன்ஷிப் வழக்குகளை விசாரித்து உள்ளது. இந்த வேளையில் உறவில் உள்ள நபர்களின் வயது மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது. மனுதாரர் தரப்பு என்பது 20, 22 வயதில் உள்ளனர். வாழ்க்கை என்பது ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்ட படுக்கையல்ல. கடினமான காலங்களை கொண்டது.
உண்மையை சொல்லப்போனால் ஒவ்வொரு தம்பதிகளும் கடினமான காலத்தை சந்திக்கின்றனர். இது எங்களின் அனுபவத்தின் மூலம் கூறுகிறோம். ஆனால், லிவ் இன் ரிலேஷன்ஷிப் என்பது எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பு, மோகத்தினால் வந்திருக்கலாம். மேலும் லிவ் இன் ரிலேஷன்ஷிப் என்பது ஒரு டைம்பாஸ் போன்றதாக இருக்கிறது. அது கண்ணாடி போல் உடையக்கூடியது. இந்த உறவு என்பது நிலையற்ற ஒன்றாகும்” என நீதிபதிகள் கூறினர். மேலும், அவர்கள் போலீஸ் பாதுகாப்பு கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.