அமெரிக்காவில், கண் சொட்டு மருந்தால் ஒருவர் உயிரிழந்ததையடுத்து சென்னையை சேர்ந்த கண் சொட்டு மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு அந்நாட்டு உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
சென்னையில் குளோபல் பார்மா ஹெல்த்கேர் என்ற தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் EzriCare என்ற செயற்கை முறையில் கண்ணீரை வரவழைக்கும் கண் சொட்டு மருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இங்கு தயாரிக்கப்படும் சொட்டுமருந்துகள் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், அமெரிக்காவில் இந்த தனியார் நிறுவனத்தின் கண் சொட்டு மருந்தை விட்ட ஒருவர், உயிரிழந்துள்ளார். மேலும் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு முழுமையாக கண்பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சொட்டு மருந்து மருந்து-எதிர்ப்பு பாக்டீரியாவால் ஏற்பட்ட மாசுப்பாட்டால் சிலருக்கு நிரந்தர பார்வை இழப்பும், ரத்த ஓட்டத்தில் ஏற்பட்ட தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று அமெரிக்க சுகாதார பாதுகாப்பு முகமை தெரிவித்தது. பாக்டீரியா தொற்று மாசுபாட்டின் காரணமாக EzriCare செயற்கைக் கண்ணீர் அல்லது Delsam Pharma’s Artificial Tears போன்றவற்றை வாங்க வேண்டாம் என்றும் அதன் பயன்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், நுகர்வோர் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்த மருந்துகளை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடைவிதித்ததையடுத்து, கண் சொட்டு மருந்துகளை தனியார் நிறுவனம் திருமபப்பெற்றுக்கொண்டுள்ளது.