டெல்லியில் காதலியை கொலை செய்து 35 கூறுகளாக்கி வீசிய சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில் கொலைக்கு லிவிங் டுகெதர் வாழ்க்கை காரணம் என்று அமைச்சர் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷ்ரத்தா என்ற பெண் ஒருவர் காணாமல்போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் பின்னர் அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. காதலனே தன் காதலியை கொலை செய்து 35 கூறுகளாக்கி வனப்பகுதிக்குள் வீசியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கில் காதலன் அஃப்தாப் கைது செய்யப்பட்டு தொடர்ந்து போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் கவுல் கிஷோரின் கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் கூறுகையில் ’’இது போன்ற சம்பவங்கள் எல்லாம் நன்றாகப் படித்தவர்கள் தாங்கள் வெளிப்படையானவர்கள், தங்கள் எதிர்காலத்தைப் பற்றி முடிவெடுக்கும் அளவுக்கு திறன் கொண்டவர்கள் என்று தங்களைத் தாங்களே நினைக்கும் எல்லாப் பெண்களிடமும் நடக்கின்றன. அவர்கள ஏன் லிவிங்டுகெதர் என்ற உறவில் வாழ்கின்றார்கள். அப்படி செய்ய வேண்டும் என்றால் இந்த உறவுகளுக்கு முறையான பதிவு இருக்க வேண்டும். மேலும் பெற்றோர்கள் அத்தகைய உறவுகளுக்கு விருப்பம் தெரிவிக்கவில்லை எனில் பதிவு திருமணமாவது செய்துவிட்டு ஒன்றாக வாழ வேண்டும். பெண்கள் ஏன் அவ்வாறு செய்கின்றார்கள் என்பதை கவனித்துக் கொள்ள வேண்டும். அதுமட்டும் இன்றி பெண்கள் இது போன்ற உறவுகளில் ஈடுபடக்கூடாது’’ என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, ’’வெட்கமற்ற, இதயமற்ற, கொடூரமான எல்லா பிரச்சனைகளுக்கும் பெண்களை குற்றம் சொல்லும் மனநிலை தொடர்ந்து வளர்ந்து வருகின்றது.’’ என எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரின் பேச்சு தற்போது பேசுபொருளாகி உள்ளது.