தமிழ்நாடு அரசு மக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது சொந்த தொழில் தொடங்கும் கைவினைஞர்களுக்கு கடன் வழங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தமிழ்நாட்டில் உள்ள கைவினைஞர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் குடும்பத் தொழில் அடிப்படையில் அல்லாமல், சுதந்திரமாக செய்து வரும் 25 கைவினைக் கலைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பு மக்களுக்காக “கலைஞர் கைவினைத் திட்டம்” உருவாக்கப்பட்டுள்ளது.
மரவேலைப்பாடுகள், கட்டிட வேலைகள், படகு தயாரித்தல், பூட்டு தயாரித்தல், மண்பாண்டங்கள், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், கூடை முடைதல், பாய் பின்னுதல், துடைப்பான்கள் செய்தல், பொம்மைகள் தயாரித்தல், மலர் வேலைப்பாடுகள், துணி நெய்தல் மற்றும் துணிகளில் கலை வேலைப்பாடுகள் செய்தல், மீன் வலை தயாரித்தல், துணி வெளுத்தல், தையல் வேலை, நகை செய்தல், அழகுக்கலை, பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல் உள்ளிட்ட 25 கைவினைக் கலைகளில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக “கலைஞர் கைவினைத் திட்டம்” உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் புதிய தொழில் தொடங்குவதற்கும், விரிவாக்கம் செய்யவும் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை கடனுதவியும், 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்ச வயது 35ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்தால் தகுதியான விண்ணப்பங்களை மாவட்டத் தொழில் மையத்தின் பொது மேலாளர்கள் தலைமையில் உள்ள குழு சரிபார்த்து, வங்கிகளுக்கு பரிந்துரைக்கும்” என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் மறக்காம இதை பண்ணுங்க..!! நல்ல வருமானம் உங்களை தேடி வரும்..!!