ராணிப்பேட்டையில் இன்று காலை விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், ”இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக செயல்பட்டு வருகிறது. அரசு சார்பில் 3% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்தோம்.
விரைவில் முதலமைச்சர் கைகளால் விளையாட்டு வீரர்கள் 100 பேருக்கு வேலை வழங்கி வாக்குறுதியை உறுதி செய்வோம். புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. யாருக்கு என்ன தேவை என்பதை அறிந்து வழங்குவது தான் திராவிட மாடலின் தனித்துவம் ஆகும். நான் உங்கள் வீட்டு பிள்ளையாக உங்களுக்கு துணை நிற்பேன்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் முதல் கையெழுத்து விடியல் பயண திட்டம் தான். இதன் மூலம் இதுவரை 580 கோடி முறை பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்திருக்கின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மாதந்தோறும் ரூ.1,000 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இன்று 3,000 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கப்பட இருக்கிறது. இதுவரை மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூ.92 ஆயிரம் கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. மக்களோடு மக்களாக கைகோர்த்து திமுக அரசு செயல்படும். முதலமைச்சர் உங்கள் குடும்பத்தின் ஒருவராக துணையாக இருப்பார்” என்றார்.