வரும் மக்களவைத் தேர்தலில் 10.5 லட்சம் வாக்குச்சாவடிகளில் 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். குறைந்தது 1.8 கோடி முதல்முறை வாக்காளர்களும், 20-29 வயதுக்குட்பட்ட 19.47 கோடி வாக்காளர்களும் வாக்கெடுப்பில் பங்கேற்க இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்காளர் பட்டியல், நாடு முழுவதும் உள்ள வாக்குச் சாவடிகள், பயன்படுத்தப்படும் EVMகளின் எண்ணிக்கை மற்றும் அமைதியான முறையில் பாதுகாப்பு நெறிமுறைகள் எவ்வாறு செயல்படுத்தப்பட வேண்டும் என்பது பற்றிய விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வழங்கியது.
இந்தியா முழுவதும் 97 கோடி வாக்காளர்கள், வரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 49.70 கோடி ஆண் வாக்காளர்கள், 47.10 கோடி பெண் வாக்காளர்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 7கட்டங்களாக நடைபெறும் தேர்தல் மற்றும் 26 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து தொகுதிகளிலும் 1.5 கோடி வாக்குச்சாவடி அலுவலர்களுடன் 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வரும் லோக்சபா தேர்தலில், 55 லட்சம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். இந்தத் தேர்தலில் 1.8 கோடி முதல்முறை வாக்காளர்களும், 20-29 வயதுக்குட்பட்ட 19.47 கோடி வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர் என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.82 லட்சம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 48,000 மூன்றாம் பாலின வாக்காளர்கள் தேர்தலில் பங்கேற்பார்கள் என்று தேர்தல் ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.85 லட்சத்துக்கும் அதிகமான முதல்முறை பெண் வாக்காளர்கள் தேர்தலில் பங்கேற்பார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் நேரத்தில் அமைதி மற்றும் சமநிலையை கடைப்பிடிப்பதற்கு டிஎம் மற்றும் எஸ்பிகளுக்கு கடுமையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சிஏபிஎஃப் பாதுகாப்பு படை வீரர்கள் பணியமர்த்தப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கட்டுப்பாட்டறைகள் மூலம் வாக்குச்சாவடிகள் கண்காணிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் ஆளில்லா ட்ரோன் விமானங்கள் மூலமாகவும் வாக்குச்சாவடி கண்காணிப்பு செய்யப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
2,100 க்கும் மேற்பட்ட பொது, காவல்துறை மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் பணியில் அமர்த்தப்பட இருக்கிறார்கள். CVigil உட்பட 27 ஆப்ஸ் மற்றும் போர்டல்களை தேர்தல் ஆணையம் பொது மக்களுக்கு வழங்கியிருக்கிறது. இதன் மூலம் பொது தேர்தலில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். இந்த புகார்களுக்கு 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்கிறது.கள்ளப் பணம், மதுபானம், போதைப்பொருள் மற்றும் இலவசங்களைத் தடுக்க அமலாக்க அமைப்புகளுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலுக்கு பொதுமக்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடிகள் எந்த வித இடையூறும் இல்லாமல் புதுமையான அனுபவத்தை தரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் குறைந்தபட்ச வசதிகளுடன் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.