பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ள நிலையில், புதிய நீதிக்கட்சி, பாஜக கூட்டணியிலேயே தொடரும் என அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்திருந்தார். பல்வேறு கருத்து முரண்பாடுகள் காரணமாக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மாற்றம் ஏற்படும் என அரசியல் வட்டாரத்தில் கருத்துக்கள் நிலவி வந்தது.
குறிப்பாக அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்த கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுமா அல்லது பாஜகவுடன் அவர்களது கூட்டணி தொடருமா என்கிற கேள்வி எழுந்தது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சி, புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இருந்த நிலையில், அதிமுக வெளியேறிய பிறகு எந்தெந்த கட்சிகள் எந்தெந்த கூட்டணியில் இணையும் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
இந்நிலையில், நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிட இருப்பதாக புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் அவர், வேலூர் தொகுதியில் போட்டியிடவுள்ளார். தமிழ்நாட்டில் இக்கூட்டணியில் போட்டியிட இருப்பதாக அறிவிக்கும் முதல் கட்சி இதுதான். 2019 தேர்தலில் இவர் அதே தொகுதியில் வெறும் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார் என்பது குறிப்படத்தக்கது.