நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும், கூட்டணி, தொகுதி பங்கீடு என பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் திமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைந்துள்ளது. கூட்டணிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக திமுக பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியது.
அதன்படி, திமுக கூட்டணியில் விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுக, கொமதேக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்படும் என்று உடன்பாடு ஏற்பட்டது.
இந்நிலையில், திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான இடங்கள் ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.