Election: 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவில் தமிழகத்தில் ஆண்களை விட பெண்கள் அதிகம் வாக்களித்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் 18 வது பாராளுமன்ற தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பொது தேர்தலில் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக இந்தியா முழுவதும் நடைபெறுகிறது.
இதன் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் பாண்டிச்சேரி உட்பட 102 பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற்றது. தமிழகத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 69.46% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பான குளறுபடி கடந்த சில இடங்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் ஆண்களை விட பெண்கள் அதிகம் வாக்களித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் வெளியாகி இருக்கிறது. கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற பொது தேர்தல்(Election) வாக்குப்பதிவில் 2.12 கோடி ஆண்கள் வாக்களித்துள்ளனர். அதே வேலையில் தமிழகம் முழுவதும் 2.21 கோடி பெண்கள் வாக்களித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன .
இதன் மூலம் எட்டு லட்சத்து 60 ஆயிரம் பெண்கள் ஆண்களை விட அதிகமாக வாக்களித்துள்ளனர் . கடந்த 2019 வருட பாராளுமன்றத் தேர்தலில் ஆண்கள் அதிகம் வாக்களித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த முறை வாக்களிப்பதில் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டி இருக்கின்றனர். தமிழகத்தில் 2019 ஆம் ஆண்டை விட தற்போது குறைவான வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் பெண்கள் அதிகம் வாக்களித்திருப்பது சற்று ஆறுதலாக அமைந்திருக்கிறது.