8ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமான வழக்கில் 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த சில மாதங்களாக பள்ளி வராததால், பள்ளி தலைமையாசிரியர் மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று பெற்றோரிடம் பேசியுள்ளார். அப்போது மாணவி கர்ப்பமாக இருந்ததாகவும், தற்போது கருக்கலைப்பு செய்ததாகவும் அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இதைக் கேட்டு தலைமை ஆசிரியர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகாரளித்தார். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவியிடம் நடத்திய விசாரணையில், பள்ளியில் உள்ள 3 ஆசிரியர்கள் மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர். இதனால், அவர் கர்ப்பமானது தெரியவந்தது.
இதையடுத்து, மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆசிரியர்கள் சின்னசாமி, ஆறுமுகம், பிரகாஷ் ஆகிய 3 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார், சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட மாணவி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், பாலியல் வழக்கில் கம்பி எண்ணும் ஆசிரியர்கள் மூவரையும் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.