மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் மத்திய அரசு – தமிழ்நாடு அரசுக்கு இடையே வார்த்தை போர் நீடித்து வரும் நிலையில், இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டம் நடந்து வருகிறது. அதேபோல், ரயில் நிலையங்களில் எழுதப்பட்டிருக்கும் இந்தி எழுத்துக்களை திமுகவினர் அழித்து நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை திமுகவினர் அழித்துள்ளனர். மேலும், அதில் தமிழ் வாழ்க என்று எழுதியுள்ளனர். அதேபோல், தென்காசி – சங்கரன்கோயில் ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையிலும் இந்தி எழுத்துக்களை திமுகவினர் அழித்து கோஷங்கள் எழுப்பினர்.
அதேபோல், கோவை மாவட்டம் பொள்ளாச்சி ரயில் நிலையத்திலும் இருந்த இந்தி எழுத்துகளை திமுக-வினர் கருப்பு பெயிண்ட்டால் அழித்துள்ளனர். மேலும், எந்தவொரு அனுமதியும் பெறாமல், ரயில் நிலையத்தில் பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துக்களை அழித்த திமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.