ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் சிக்கல் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 9 கிராமங்கள் உள்ளன. அதன்படி தொட்டியாப்பட்டி, ஆண்டிச்சிகுளம், சிக்கல், டொட்டப்பல்சேரி, மதினார் நகர், கழநீர் மங்கலம், இ.சி.ஆர் காலனி உட்பட 9 கிராமங்களில் சுமார் 13,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் ஒரு வருடமாக காவிரி கூட்டுக்குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஒரு குடம் குடிநீரை ரூ.10 விலை கொடுத்து வாங்கி அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வீட்டு உபயோகத்திற்கு அங்குள்ள குளத்து நீரை பயன்படுத்தி வருகின்றனர். அதுவும் கோடைக்காலத்தில் வற்றிவிடுவதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கிடையே, கிராமத்திற்கு நிரந்தர குடிநீர் வசதி கேட்டு, ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். மேலும் ஊராட்சியின் 12 வார்டு கவுன்சிலர்கள், துணைத்தலைவர் நூருல் அமீன் தலைமையில் ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் ஆட்சியரிடம் ஒட்டுமொத்தமாக தங்களது ராஜினாமா கடிதத்தை வழங்கினர்.
இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் பரக்கத் ஆயிஷா கூறுகையில், “சிக்கல் பஞ்சாயத்தில் 3 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ஒரு புதிய தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் முறையாக குடிநீர் வராததால் இதன் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை. உள்ளூர் நீர் ஆதாரங்களும் உப்புத்தன்மையுடன், வறட்சி தன்மை அடைந்துவிட்டது“ என்றார். குடிநீர் வசதி கேட்டு ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா கடிதம் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.