திருவனந்தபுரத்தில் பரிகார பூஜை நடத்தி 55 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் பணம் மோசடி செய்த போலி பெண் மந்திரவாதியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் வெள்ளயாணி பகுதியைச் சேர்ந்த விஸ்வாம்பரன் என்பவரது குடும்பத்தில் சிலர் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இதனால், அவர் மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார். மன நிம்மதி தேடி மருத்துவரை அணுகாமல் அந்த பகுதியில் உள்ள ஒரு ஜோதிடரை அணுகியுள்ளார். அதற்கு அவரோ, சில பரிகார பூஜைகள் நடத்த வேண்டும், அதற்கு பெண் மந்திரவாதி வித்யாவை அணுகுமாறு அந்த ஜோதிடர் பரிந்துரைத்துள்ளார். அதன்படி, கடந்த ஆண்டு விஸ்வாம்பரன், களியக்காவிளை சென்று பெண் மந்திரவாதி வித்யாவை சந்தித்தார். அப்போது, அவரிடம் நேரடியாக வீட்டுக்கு வந்து பரிகார பூஜை நடத்துகிறேன் என்று வித்யா கூறியுள்ளார். அதன்படி, சில நாட்கள் கழித்து விஸ்வாம்பரனின் வீட்டுக்கு வந்த வித்யா, கடுமையான சாப தோஷம் இருப்பதால் வீட்டில் வைத்து தொடர்ந்து பரிகார பூஜை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
பின்னர் வீட்டிலேயே ஒரு அறை பூஜை அறையாக மாற்றப்பட்டது. ஒரு வாரத்திற்கு மேல் வித்யாவும், அவருடன் வந்தவர்களும் சேர்ந்து பூஜை நடத்தினர். ஒரு கட்டத்தில் தேவியின் சாபம் குறையவில்லை என கூறிய வித்யா, வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தை வைத்து பூஜை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய அப்பாவி விஸ்வாம்பரன் வீட்டில் இருந்த 55 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1.50 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். அவற்றை பூஜை அறையில் உள்ள பீரோவில் வைத்து விட்டு செல்லும்படி வித்யா கூறியுள்ளார். பூஜை முடிந்ததும் 2 வாரம் கழித்து தன்னிடம் தெரிவித்து விட்டு பீரோவை திறந்து நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொள்ளும்படி கூறிவிட்டு வித்யா சென்றுள்ளார்.
2 வாரங்கள் கழிந்ததும் வித்யாவை விஸ்வாம்பரன் தொடர்புகொண்டு பீரோவை திறக்கலாமா? என்று கேட்டுள்ளார். தேவியின் சாபம் இன்னும் குறைவில்லை என்றும், 3 மாதம் கழித்து தான் பீரோவை திறக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதன்படி 3 மாதமும் கழிந்தது. பின்னர் கேட்டபோது ஒரு வருடம் கழித்து திறக்க வேண்டும் என்று வித்யா கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் சந்தேகம் அடைந்த விஸ்வாம்பரன் பூஜை அறைக்கு சென்று பீரோவை திறந்து பார்த்துள்ளார். அப்போது அதில் வைத்திருந்த நகை மற்றும் பணத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த விஸ்வாம்பரன் உடனடியாக வித்யாவை தொடர்பு கொண்டு விவரத்தை கூறியுள்ளார். அப்போது காவல்நிலையத்தில் புகார் கொடுத்தால் குடும்பத்தையே கொலை செய்து விடுவேன் என்று வித்யா மிரட்டியுள்ளார். இருப்பினும் விஸ்வாம்பரன் இது குறித்து திருவனந்தபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து பெண் மந்திரவாதி வித்யா மற்றும் அவருடன் வந்தவர்களை காவலர்கள் தேடி வருகின்றனர்.