தூத்துக்குடி அருகே கடந்த ஜனவரி மாதம் ஒருவர் 10 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழி தீர்க்கும் விதமாக, ஏழு மாதத்திற்கு பிறகு, ஒருவர் பட்ட பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் சங்கரப்பேரி பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்ற இளைஞர், கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி பத்துக்கும், அதிகமான மர்ம நபர்கள் சிலரால், வீட்டில் வைத்து, வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த கொலை சம்பவம் குறித்து, சக்திவேல் என்பவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட ஒரு சில தினங்களிலேயே, ஜாமீனில் வெளியே வந்தார். இதன் காரணமாக, சக்திவேல் மீது கருப்புசாமி தரப்பைச் சேர்ந்தவர்கள், மிகுந்த ஆத்திரத்தில், இருந்ததாக கூறப்படுகிறது.
ஆகவே கருப்புசாமியின் படுகொலைக்கு பழி தீர்க்கும் விதமாக, அவருடைய ஆதரவாளர்கள், நேற்றைய தினம் சங்கரப்பேரி சாலையில் அமைந்துள்ள சோழன் லாரி புக்கிங் அலுவலகத்தில், அலுவலக உரிமையாளர் சக்திவேல் அலுவலகத்திற்கு வெளியே நாற்காலியில், அமர்ந்திருந்தபோது, அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், நாட்டு வெடிகுண்டை வீசி, சக்திவேலை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு, அங்கிருந்து தப்பி சென்றது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. ஆகவே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சக்திவேல் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து, தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டிருக்கிறார்கள்.