தினந்தோறும் கொள்ளு சூப் குடிப்பதால் 30 நாட்களில் உடல் எடையை குறைக்கலாம். கெட்ட கொழுப்புகளை வெளியேற்றி உடல் எடையை குறைக்க கொள்ளு சூப் எப்படி தயார் செய்வது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கொழுத்தவனுக்கு கொள்ளு; இளைத்தவனுக்கு எள்ளு’ என்ற பழமொழிக்கு ஏற்றவகையில், அர்த்தம் நிறைந்தது கொள்ளு. கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு அத்தனை சக்தி உண்டு. அதற்காக, இதை வெறும் கொழுப்பைக் குறைக்கும் உணவு என்று சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது.
ஏராளமான மருத்துவப் பலன்களையும் உள்ளடக்கியுள்ளது. இது ஓர் ஆரோக்கிய உணவு. ஊற வைத்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ரசம், துவையல், குழம்பு என விதவிதமாகச் சமைத்தும் சாப்பிடலாம். நன்கு அரைத்து, சாறு
எடுத்து சூப்பாகச் செய்தும் அருந்தலாம்.
அந்தவகையில் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினந்தோறும் காலை வெறும் வயிற்றில் டீ காபிக்கு பதிலாக கொள்ளு சூப் அருந்தினால், 30 நாட்களில் உடல் எடையை குறைக்க உதவுகிறது. கொள்ளு சூப்
செய்வதற்கான ரெசிபி இதோ:முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 200 கிராம் கொள்ளு சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். கொள்ளை வதக்கும் போது அது வறுபட்டு பொரிந்து வரும். அப்படி
பொரிந்து வந்த பின்னர் அடுப்பை அணைத்து கொள்ளலாம். வறுக்கப்பட்ட கொள்ளை ஒரு பெரிய அகலமான தட்டில் அல்லது பாத்திரத்தில் போட்டு அதை ஆற வைக்க வேண்டும்.
பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடி இரண்டு மாதம் வரை கெட்டுப் போகாது. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 300ml அளவு தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீரில் ஒன்றரை டீஸ்பூன் அளவு நாம் பொடி செய்து வைத்துள்ள கொள்ளு பொடியை சேர்க்கவேண்டும். இதனுடன் நறுக்கிய பூண்டுப் பல் 1, சீரகம் கால் ஸ்பூன், உப்பு இரண்டு சிட்டிகை சேர்த்து தண்ணீரை கொதிக்க வைக்கவேண்டும். தண்ணீர் கொதி வந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து
விட்டு ஏழு நிமிடம் வரை வைக்க வேண்டும்.
பின்னர் அடுப்பை அணைத்து விட்டு வடிகட்டி இதனுடன் கால் ஸ்பூன் அளவு மிளகு தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் கொள்ளு சூப் ரெடி. மேலும் கொள்ளு உடலுக்கு சூட்டை கொடுக்கக் கூடியது என்பதால் உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது வாரத்தில்
மூன்று நாள் என்ற முறையில் இந்த கொள்ளு சூப் குடிப்பது நன்மை தரும்.