காவல் நிலையத்திற்குள் சிறுமியை நிர்வாணப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்த ஆய்வாளர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அசாம் மாநிலம் நல்பாரி மாவட்டம் கோக்ராபர் என்ற பகுதியில் ஒரு அதிர்ச்சிக்குரிய சம்பவம் அரங்கேறியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது காதலனை திருமணம் செய்ய வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். காதலர்கள் இருவரையும் கோக்ராபர் காவல்நிலைய போலீசார் பிடித்து கைது செய்தனர். காதலர்கள் இருவரும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அன்றைய இரவு லாக் அப்பில் அடைத்து வைக்கப்பட்டனர். அப்போது தான் 17 வயது சிறுமிக்கு இந்த கொடூரம் அரங்கேறியிருக்கிறது. அங்கு பணிபுரிந்த காவல் ஆய்வாளர் பிமான் ராய், சிறுமியை மிரட்டி ஆடைகளை களைய வைத்து நிர்வாணப்படுத்தியுள்ளார்.
காவல் நிலையத்தில் மற்ற போலீசார் முன்னர் சிறுமியை நிர்வாணமாக்கி அதை புகைப்படம் எடுத்த பிமான் ராய், சிறுமிக்கு பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். பாதிப்புக்குள்ளான சிறுமி தனக்கு நேர்ந்த அவலத்தை புகார் கடிதமாக எழுதி காவல்துறை உயர் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ளார். இதைத் தொடர்ந்து டிஐஜி பிரஜென்ஜித் காவல்நிலையத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இது தொடர்பாக அறிக்கையை அசாம் டிஜிபி ஜிபி சிங்கிடம் சமர்பித்தார்.
சிறுமியின் புகாரின் பேரில் பீமான் ராயை சஸ்பெண்ட் செய்து அசாம் டிஜிபி ஜிபி சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார். பீமான் ராய் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக இருக்கும் பீமான் ராயை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.