ராஜஸ்தான் மாநிலம் பாலேசார் பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் தருணா சர்மா. இவர் தன்னுடன் பள்ளியில் படித்த சுரேந்திரா சங்கலா என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனாலும், காதலில் உறுதியாக இருந்த இருவரும் திருமணம் செய்து கொண்டு சொந்த ஊரில் இருந்து வெளியேறி தலைமறைவாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், திருமணமான 10ஆவது நாளிலேயே தம்பதியை பெண் வீட்டார் கண்டுபிடித்தனர். பின்னர், காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து இருவரையும் கட்டாயமாக பிரித்து வைத்தனர்.
அதன் பின்னர் அப்பெண் எங்கு இருக்கிறார் என தெரியாத அளவுக்கு பெற்றோர் தருணா சர்மாவை அடைத்து வைத்திருந்தனர். இந்நிலையில், தருணாவுக்கு முதல் திருமணமான விவகாரத்தை மறைத்து கடந்த மே 1ஆம் தேதி ஜிதேந்திரா ஜோஷி என்ற நபருக்கு இரண்டாவது திருமணம் செய்துவைத்தனர். அப்போது தருணா எதுவும் கூறவில்லை. ஆனால் திருமணமான சில நாட்களிலேயே இரண்டாவது கணவரிடம் தனது முதல் திருமணம் குறித்து கூறிவிட்டார். இதனால் 2-வது கணவருக்கு உண்மை தெரியவந்தது. பின்னர், இரண்டாம் கணவர் ஜிதேந்திரா தன்னை தாக்கி கொடுமைப்படுத்துவதாக தருணா குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தான் முதல் கணவரிடமே சேர்ந்து வாழ விரும்புவதாகவும் கூறினார். எனினும் ஏற்க மறுத்ததால், ஒருகட்டத்தில் இரண்டாம் கணவரின் கையில் ராக்கி கட்டி அவரை சகோதரர் போல எனக் கூறிவிட்டார். தற்போது தருணா சர்மாவை பெண்கள் நல ஆலோசனை மையத்திற்கு அனுப்பி வைத்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தருணா தனது முதல் கணவருடன் சேர்ந்து வாழ்வதில் உறுதியாக உள்ளதாக கூறி வருகிறார்.