புதுச்சேரியில் காதலி தற்கொலை செய்து கொண்ட அதே இடத்தில் காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி தேங்காய்திட்டு புதுநகர் வைகை வீதியை சேர்ந்தவர் திருக்குமரன். இவர், வெளிநாட்டில் பணி புரிந்து வருகிறார். இவரது இளைய மகன் ராமகிருஷ்ண சாய் (19) சமுதாய கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இவரது அண்ணன் வாசுதேவன் நேற்று மதியம் வீட்டிற்கு வந்த போது ராமகிருஷ்ணன் தூக்குப்போட்டு தொங்கியபடி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ராமகிருஷ்னின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் ராமகிருஷ்ணன் தனது வீட்டின் அருகே உள்ள தன்னை விட ஒரு வயது மூத்த பெண்ணான அஞ்சலி என்பவரை காதலித்து வந்துள்ளார். இது பெண்ணின் பெற்றோருக்கு பிடிக்காத காரணத்தினால் இருவரின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், ராமகிருஷ்ணசாய் அஞ்சலியிடம் தன்னை மறந்துவிடும்படி கூறியதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த அஞ்சலி கடந்த 17ஆம் தேதி ராமகிருஷ்ணசாயின் வீட்டிற்கு வந்து அவரது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் இறந்து 20 நாட்களாகியும் சோகத்தில் இருந்த ராமகிருஷ்ணன் காதலியை மறக்க முடியாமல் இருந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து காதலியின் புகைப்படத்தை பார்த்த வண்ணமே இருந்துள்ளார். அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதே இடத்தில் ராமகிருஷ்ணனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காதலி இறந்த 20 நாட்களில் காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.