மதிய உணவு சாப்பிட்ட 36 மாணவ, மாணவிகள் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம் சாங்லி அடுத்த வான்லெஸ்வாடி உயர்நிலைப் பள்ளியில் 5ஆம் வகுப்பு மற்றும் 7ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு சுயஉதவிக் குழுவினால் தயாரிக்கப்பட்ட மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்ட மாணவ, மாணவிகளில் 36 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கல்வி அதிகாரி கெய்க்வாட் கூறுகையில், ’மதிய உணவு சாப்பிட்ட பின்னர் 36 மாணவ, மாணவியருக்கு வயிற்று வலி மற்றும் குமட்டல் ஏற்பட்டுள்ளது. அவர்களில் பலர் வாந்தி எடுத்தனர்.
மருத்துவமனையில் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் நலமாக உள்ளனர். பள்ளியின் சமையலறையில் இருந்து உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மதிய உணவு திட்ட அதிகாரியிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது’ என்றார்.