சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதன் முழு விவரங்களை தற்போது பார்க்கலாம்.
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஓராண்டு கட்டணம் ரூ.4.3 லட்சத்தில் இருந்து ரூ.4.5 லட்சமாக உயர்ந்துள்ளது. அதே போல் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஓராண்டு கட்டணம் ரூ.12.5 லட்சத்தில் இருந்து ரூ.13.5 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இடஒதுக்கீடு கட்டணங்களும் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ரூ. 23.5 லட்சமாக இருந்த நிலையில், தற்போது ரூ.24.5 லட்சமாக உள்ளது. இதனைத் தொடர்ந்து வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் நிரம்பவில்லை என்றால், பொதுத்தொகுப்புக்கு மாற்றப்படும். அவ்வாறு ஒதுக்கப்படும் இடங்களின் கட்டணம் ஆண்டுக்கு 21.5 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தாண்டு புதிதாகத் தொடங்க உள்ள இரண்டு தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களுக்கான கட்டண விவரம்…
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் மற்றும் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு ரூ. 5.4 லட்சமும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ. 16.2 லட்சமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடு வாழ் இந்தியர் இடங்களுக்கு ரூ. 29.4 லட்சமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணங்களைக் காட்டிலும் மாணவர்கள் கூடுதலாகவும் கட்டணங்களைச் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான புதிய கட்டணம்…
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ. 4.5 லட்சமும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ. 13.5 லட்சமும், வெளிநாடு வாழ் கட்டணம் ரூ. 24.5 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்துள்ள கட்டணம் என்பது சிறப்புக் கட்டணம், சேர்க்கை கட்டணம், டியூஷன் கட்டணம், விளையாட்டு கட்டணம், ஆய்வக கட்டணம் உள்ளிட்டவற்றுக்குப் பொருந்தும். இந்த கட்டணங்களைத் தவிர்த்து மாணவர் வளர்ச்சி நிதியாக 40 ஆயிரம் வசூலித்துக் கொள்ளவும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விடுதி கட்டணம், போக்குவரத்து கட்டணம், உணவு கட்டணம் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த கட்டண விகிதத்தில் அடங்காது. அதற்குத் தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும். இதனால் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாக ஆண்டுதோறும் ஒரு லட்சம் வரை கட்டணத்தை மாணவர்கள் செலுத்த நேரிடும். ஏற்கனவே மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணம் அதிகமாக இருப்பதாகக் கல்வியாளர்கள் பெற்றோர்கள் கருத்துக்களை முன்வைக்க நிலையில், தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண விகிதங்கள் அதிகரித்துள்ளதுடன் கூடுதலாகவும் மாணவர்கள் கட்டணங்களைச் செலுத்தும் நிலை உருவாகியுள்ளது.