சென்னையில் மெட்ராஸ் ஐ பாதிப்பு வேகமாக பரவி வருகிறது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் மெட்ராஸ் ஐ பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் மெட்ராஸ் ஐ பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது . குடும்பத்தில் ஒருவருக்கு மெட்ராஸ் ஐ பாதித்தாலே குடும்பம் முழுவதும் பரவ வாய்ப்புள்ளது. மெட்ராஸ் ஐ பாதித்தவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சொட்டு மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கூறினார்.
மேலும், வருகிற 16ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை, ஆகிய 10 நாட்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வகையான பள்ளி மாணவர்களுக்கும் கண் பரிசோதித்து பாதுகாக்கின்ற மகத்தான திட்டத்தை அரசு முன்னெடுத்து இருக்கிறது என்று கூறினார். மேலும் வருகிற செப்டம்பர் 16ஆம் தேதி காலை 9 மணிக்கு ஏதாவது ஒரு பள்ளியில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று கூறினார்.
மேலும் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியம், இதுவரை தமிழ்நாடு முழுவதிலும் 3,702 பேர் கண் தானம் செய்துள்ளனர் அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் வாழ்த்துக்களும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.