தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் போலீசார் விசாரணை நடத்தியதில், ஏற்கனவே 20 கொலைகளை செய்த கொலைகாரன் என்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். வேலைவாய்ப்பு, திருமண தடை, சொத்து கைவசப்படுத்துவது, உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு மந்திரத்தால் பூஜை செய்து நடக்க வைப்பதாக கூறி நம்பவைத்து அவர்களை கொலை செய்வது தெரியவந்தது.
வனபர்த்தி மாவட்டம் நாகப்பூர் கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கொலை செய்ததும், சமீபத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஒருவரிடம் பணம் பறித்துக் கொண்ட நிலையில், வேலை கிடைக்காததால் அவர் கேள்வி கேட்டதால் அவரையும் கொன்றுள்ளார். இந்நிலையில், ஐதராபாத்தில் நடந்த ஒரு கொலை வழக்கின் விசாரணையில் மந்திரம் செய்து ஏமாற்றி கொலை செய்து வந்த சத்தியத்தை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
இவர் மீது கடந்த காலங்களில் ஆந்திரா, தெலங்கானாவில் பல வழக்குகள் இருப்பதும் போலீசார் அலட்சியம் காட்டியதால் பல கொலை நடந்துள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கும். இதுவரை இடம்பெற்ற கொலைகளில் பாதிக்கப்பட்டவர்களின் நிலம், சொத்துகள், பணம் அபகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.