திருமணம் தாண்டிய உறவு வைத்திருந்த தம்பதிகளை தனது கண் முன்பாக உறவு கொள்ள வைத்து அவர்கள் மீது ஃபெவிகுயிக் ஊற்றி கொலை செய்த மந்திரவாதியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகில் உள்ள கேலாபாவடி என்ற இடத்தில் இருக்கும் வனப்பகுதியில் கடந்த 18ஆம் தேதி ஒரு தம்பதி கொலை செய்யப்பட்டு நிர்வாணமாக கிடந்தனர். இக்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்த இரண்டு பேரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்களாக இருந்ததால், இருவரும் ஆணவக்கொலை செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்று போலீஸார் ஆரம்பத்தில் நினைத்தனர்.

ஆனால், போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் இந்த சம்பவத்தில் மந்திரவாதி ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பாலேஷ் குமார் என்ற மந்திரவாதியை பிடித்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல் வெளியானது. இது குறித்து இவ்வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ”கொலை செய்யப்பட்டவர்கள் பெயர் ராகுல் மீனா (30), சோனு (28) ஆகும். அவர்கள் இருவருக்கும் தனித்தனியே திருமணமாகிவிட்டது. அவர்கள் அடிக்கடி அங்குள்ள கோயில் ஒன்றுக்கு வருவதுண்டு. அப்படி வரும்போது அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் நட்பு ஏற்பட்ட பிறகு ராகுல் அடிக்கடி தனது மனைவியுடன் சண்டை போட்டுள்ளார்.

இதனால் ராகுல் மனைவி மந்திரவாதி பாலேஷ் குமாரின் உதவியை நாடியுள்ளார். பாலேஷ் அங்கு கடந்த 8 ஆண்டுகளாக தங்கி இருந்து தாயத்துக்களை செய்து கொடுப்பதோடு சில மாந்திரீக செயல்களையும் செய்து வந்தார். அதோடு சோனுவிற்கும், பாலேஷ் நன்கு அறிமுகமானவர் தான். இதனால் சோனுவுக்கும், ராகுலுக்கும் இடையே இருந்த திருமணம் மீறிய உறவு குறித்து பாலேஷுக்கு நன்கு தெரிந்திருந்தது. எனவே, ராகுல் மனைவியிடம் ராகுல் மற்றும் சோனுவிற்கு இடையே இருக்கும் உறவு குறித்து பாலேஷ் தெரிவித்தார்.

சோனுவுடனான உறவு குறித்து தனது மனைவியிடம் பாலேஷ் தெரிவித்தது ராகுலுக்கு தெரியவந்தது. உடனே மந்திரவாதி பாலேஷிடம் சென்று சண்டையிட்ட ராகுல், போலி மானபங்க புகார் கொடுப்பேன் என்று பாலேஷை மிரட்டினார். இதனால் இவ்வளவு நாள்களும் கட்டிக்காத்து வந்த கெளரவம் பாதிக்கப்படுமே என்று பாலேஷ் அச்சம் அடைந்தார். இதனால், பாலேஷ் இரண்டு பேரையும் பழிவாங்க திட்டமிட்டார். இதற்காக கடையில் இருந்து 50-க்கும் மேற்பட்ட சூப்பர் க்ளூ (ஃபெவிகுயிக்) டியூப்களை வாங்கி வந்து அவற்றை பாட்டில் ஒன்றில் மொத்தமாக ஊற்றினார்.

கடந்த 15ஆம் தேதி ராகுல் மற்றும் சோனுவை பாலேஷ் வனப்பகுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றார். இருவரையும் தனது கண் முன்பு உடலுறவு வைத்துக் கொள்ளும்படியும், சில சடங்குகள் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பாலேஷ் சொன்னபடி இருவரும் காட்டுக்குள் அவர் கண் முன்பு உறவு வைத்துக் கொண்டனர். அவர்கள் உறவு வைத்துக்கொண்டிருந்த போது தான் பாட்டிலில் கொண்டு வந்திருந்த ஃபெவிகுயிக் திரவத்தை இருவர் மீதும் பாலேஷ் ஊற்றினார். இதனால் இருவராலும் ஒருவரை விட்டு ஒருவர் பிரித்துக்கொள்ள முடியவில்லை. இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய முயன்றனர். இதில் அவர்களின் தோல் அப்படியே பிய்த்துக்கொண்டு வந்தது. ராகுல் ஆணுறுப்பு அப்படியே உடம்பில் இருந்து பிய்த்துக்கொண்டது. சோனுவிற்கும் அந்தரங்க உறுப்பின் தோல் பகுதி பிய்த்துக்கொண்டது. அவர்கள் ஒருவரை ஒருவர் தங்களை பிரித்துக்கொள்ள முயன்ற போது பாலேஷ் இருவரையும் தாக்கினார். ராகுல் கழுத்தை கத்தியால் அறுத்ததோடு சோனுவை கத்தியால் குத்திவிட்டு பாலேஷ் தப்பி சென்றுவிட்டார்.

இதில் இரண்டு பேரும் உயிரிழந்துவிட்டனர். கொலை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியும் இக்கொலையில் பாலேஷுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட சோனுவுடன் பாலேஷ் அடிக்கடி மொபைல் போனில் பேசியிருக்கிறார். எனவே, முக்கோண காதல் பிரச்சனையில் இக்கொலை நடந்ததா? என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.