Boat capsizes: லிபியா கடற்கரையில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 65 பேரும் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின்படி (MoFA), ‘லிபிய நகரமான ஜாவியாவின் வடமேற்கே உள்ள மார்சா டெலா துறைமுகத்திற்கு அருகே சுமார் 65 பயணிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த படகில் பயணம் செய்த 65 பேரும் நீரில் மூழ்கினர். இந்த பயணத்தில் பெரும்பாலானோர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவரை அடையாளம் காண உள்ளூர் அதிகாரிகளுக்கு உதவுவதற்காக திரிப்போலியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் உடனடியாக ஒரு குழுவை ஜாவியா மருத்துவமனைக்கு அனுப்பியது. பாதிக்கப்பட்ட பாகிஸ்தானியர்கள் பற்றிய விரிவான தகவல்களைப் பெற தூதரகம் முயற்சிப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 65 பயணிகளில் மொத்த பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கையை வெளியுறவு அலுவலகம் உறுதிப்படுத்தவில்லை.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் மொராக்கோ அருகே நடந்த விபத்தில் 66 பாகிஸ்தானியர்கள் உட்பட குறைந்தது 86 பயணிகளைக் கொண்ட படகு கவிழ்ந்தது. 36 பேரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. இந்த சம்பவத்தில் 50 பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் அரசாங்கம் மனித கடத்தல்காரர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்கு எதிராக ஒரு பெரிய ஒடுக்குமுறையைத் தொடங்கியது.
பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசாங்கம், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மற்றும் நாட்டிலிருந்து சட்டவிரோதமாக மக்கள் குடியேறுவதற்கு உதவிய அதிகாரிகள் மீது உடனடியாகவும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. அதாவது பிப்ரவரி மாதம் தொடக்கத்திலேயே பாகிஸ்தான் விமான நிலையங்களில் இருந்து மனித கடத்தலில் ஈடுபட்டதற்காக மத்திய புலனாய்வு அமைப்பின் (FIA) குறைந்தது 35 அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.