இனிப்பு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இனிப்பு பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக அல்வா என்றால் தனி சுவை தான். திருநெல்வேலியை சேர்ந்த நண்பர் யாராவது இருந்து விட்டால் போதும், அவர்களை பார்க்கும் போதெல்லாம் அல்வா கேட்டு அவர்களை ஒரு வலி செய்து விடுவோம். அது மட்டும் இல்லாமல், எளிதாக செய்யக்கூடிய அல்வாவை, நினைத்த போதெல்லாம் வீட்டில் செய்து சாப்பிடும் அல்வா பிரியர்கள் அநேகர் உண்டு. பொதுவாக அல்வாவில் கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா, பிரட் அல்வா, திருநெல்வேலி அல்வா, கோதுமை அல்வா என பல வகைகள் உள்ளன. ஆனால் நீங்கள் கொய்யா இலை அல்வாவை சுவைத்தது உண்டா? ஆம், உண்மை தான். கொய்யா இலையை வைத்து அட்டகாசமான சுவையில் அல்வா செய்யலாம். கொய்யா இலையில் எப்படி சுவையான அல்வா செய்வதென்று பார்க்கலாம் வாங்க.
முதலில் கொய்யா இலைகளை நன்கு கழுவி, ஒரு மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளுங்கள். பின் அதனை நன்கு பிழிந்து, கொய்யா இலை சாறை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பவுளில் கார்ன் பிளவர் மாவு எடுத்து அதனுடன் இந்த சாறை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் விட்டு, அதில் முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்துவிடுங்கள். பின் அதே கடாயில் கார்ன் பிளவர் மாவு கலந்த கொய்யா இலை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
10 நிமிடங்கள் கைவிடாமல் தொடர்ந்து கலந்த பின்னர், சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். 10 நிமிடங்கள் நன்கு கலந்த பிறகு, ஒரு டீஸ்பூன் நெய் விட்டு கலந்து கொள்ளுங்கள். இப்போது கடாயில் ஒட்டாமல் நன்றாக அல்வா பதத்திற்கு வந்த உடன், அடுப்பை அணைத்து விடுங்கள். இறுதியாக ஏற்கனவே வறுத்து வைத்திருந்த முந்திரியை சேர்த்துவிடுங்கள். இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான கொய்யா இலை அல்வா ரெடி..