ஈரோடு மாவட்டத்தில் அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை கழுத்தை நெறித்து அவரிடமிருந்து நகைகளை பறிக்க முயன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை YouTube பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை கைது செய்து விசாரித்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கேத்தம்பாளையம் என்ற ஊரைச் சேர்ந்தவர் நடராஜ்.. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகாலை நேரத்தில் முகமூடி அணிந்த மர்ம நபர் நடராஜன் வீட்டிற்குள் சென்று இருக்கிறார். அந்த நபர் உறங்கிக் கொண்டிருந்த நடராஜனின் மனைவி அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்று உள்ளார். அப்போது நடராஜனின் மனைவி கழுத்தை நெரித்ததாகவும் தெரிகிறது.
இந்த சம்பவத்தில் நடராஜனின் மனைவி கத்தி கூச்சல் போட்டிருக்கிறார். இதனை தொடர்ந்து மர்ம நபர் நடராஜனின் மனைவியின் வாயை பொத்தி நகைகளை கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது நடராஜன் மற்றும் அவரது மகன்கள் வீட்டிற்குள் வரவே கொள்ளையன் தப்பிச் சென்று இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் (YouTube) வேகமாக பரவி வருகிறது .
இந்தக் காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் முகமூடி அணிந்த கொள்ளையனை தீவிரமாக தேடி வந்தனர். காவல்துறையின் விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் அதே பகுதியைச் சேர்ந்த தயானந்த் என்பது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து விசாரித்தனர். மேலும் இந்த நபர் நீலகிரி மாவட்டம் தோட்டக்கலைத் துறையில் பணியாற்றி வந்ததும் தெரிய வந்திருக்கிறது.
மேலும் இவர் தனது பணியில் இருந்த காலகட்டத்தில் பணத்தை கையாடல் செய்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து கையாடல் செய்த பணத்தை 3 மாதத்திற்குள் திருப்பி தருவதாக கூறிவிட்டு தனது சொந்த கிராமத்திற்கு வந்திருக்கிறார். மேலும் விரைவாக பணத்தை சம்பாதிப்பதற்கு குறுக்கு வழியில் யோசித்து ‘YouTube’ பார்த்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது காவல்துறை.