அம்மாபேட்டை அருகே உள்ள செம்படாபாளையம் மணக்காட்டூரை சேர்ந்தவர் 46 வயதான ஆறுமுகம். இவருக்கு 44 வயதான வெங்கடேசன் என்ற தம்பி உள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக முன்பு, ஆறுமுகத்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஆறுமுகம் உயிரிழந்துள்ளார். தனது அண்ணன் மீது அதிக பாசம் வைத்திருந்த வெங்கடேசன், வீட்டில் வைத்திருந்த அண்ணனின் உடலை பார்த்து கதறி துடித்துள்ளார்.
பின்னர், வெங்கடேசன் தனது மனைவி சங்கீதாவிடம், அண்ணன் உடலை நீ தகனம் செய்வதற்காக பவானியில் உள்ள மின் மயானத்துக்கு கொண்டு செல், நான் பின்னால் வருகிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து, சங்கீதா தனது உறவினர்களுடன் ஆறுமுகத்தின் உடலை பவானி மின்மயானத்துக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வெங்கடேசன் அங்கு வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் வீட்டிற்க்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது வெங்கடேசன், தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், சம்பவம் கூறது அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், அண்ணன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்த வெங்கடேசன் அவருடைய இறப்பை தாங்க முடியாமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.