உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், சிஐஎஸ்எஃப் பெண் அதிகாரியால் ஏமாற்றப்பட்டதால் மங்களூரில் லாட்ஜில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அபிஷேக் சிங் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் 20 நிமிட வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பாண்டேஷ்வர் காவல் அதிகாரிகளின் கூற்றுப்படி, அபிஷேக் சிங் என்ற நபர் ரீகல் பேலஸ் லாட்ஜில் உள்ள அறையில் 3-4 நாட்களாக தங்கியிருந்தார். அவர் உத்தரபிரதேசத்தின் காஜிபூரைச் சேர்ந்தவர். கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறி கண்காட்சியில் பங்கேற்க மங்களூர் வந்திருந்தார். உயிரை மாய்த்துக்கொள்ளும் முன் மார்ச் 1ம் தேதி அவர் இன்ஸ்டாகிராமில் நேரலையில் வந்துள்ளார்.
நேரலையில் மோனிகா சிஹாக் என்ற பெண் அதிகாரி மீது அபிஷேக் சிங்கின் குற்றம் சாட்டினார். மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் (CISF) உதவி கமாண்டன்ட் மோனிகா சிஹாக் தன்னை ஏமாறிவிட்டதாகவும், ஏற்கனவே திருமணம் செய்து கொண்ட உண்மையை மறைத்து, தன்னை ஏமாற்றி, தன்னுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டதாக தெரிவித்தார். காதல் என்ற பெயரில் தன்னை உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சுரண்டியது மட்டுமல்லாமல், நிதி ரீதியாகவும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாக அபிஷேக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்ததாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.
வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், அபிஷேக் சிங் தற்கொலையை தீவிரமாக எடுத்துக் கொண்ட காவல்துறையினர், பாண்டேஷ்வர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, யார் இந்த மோனிகா, இவர் உண்மையில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் பணிபுரிகிறாரா உள்ளிட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மோனிகா என்ற பெண் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.