பலர் பல விதமான சாதனைகளை செய்வது உண்டு. எதையாவது செய்து பிரபலமாக வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு இருக்கும். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் செய்த காரியம் பலரை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. ஆம், அப்படி அவர் என்ன செய்தார் தெரியுமா??
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சந்திரபிரகாஷ். 3 அடி நீளம் கொண்ட தாடியை வளர்த்து இவர் சாதனையை படைத்துள்ளார். மேலும், மாநிலத்திலேயே நீளமான தாடி வைத்துள்ள நபர் என்ற பெருமை இவரையே சேரும். தற்போது உள்ள காலகட்டத்தில் இருக்கும் பெண்கள், கூந்தல் சற்று நீளமாக இருந்தால் உடனே அதை வெட்டி விடுகின்றனர். சிலர் இதை அழகிற்காக செய்தாலும் சிலர் தங்களால் கூந்தலை பராமரிக்க முடியவில்லை என்று செய்கின்றனர். இப்படி இருக்க, சந்திரபிரகாஷ் எப்படி இத்தனை நீளமான தாடியை வளர்த்தார் என்பதை பற்றி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “கடந்த 7 வருடங்களாக ஷேவ் செய்யாமல் தாடியை வளர்த்து வருகிறேன். நான் என்னுடைய தாடியை பராமரிக்க தினமும் ஒரு மணி நேரம் எடுத்து கொள்கிறேன். மேலும், நெல்லிக்காய் மற்றும் மோர் ஆகியவற்றால் மாதத்திற்கு ஒரு முறை தாடியை கழுவுவேன். குளிக்கும் போது கண்டிஷனரையும் தடவுவேன். அது மட்டும் இல்லாமல் தேங்காய் மற்றும் எள் எண்ணையையும் தடவுவேன்” என்று கூறினார்.
இவர் பீகானேரில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று, மிக நீளமான தாடி வளர்த்தவர் என்ற விருதை பெற்றுள்ளார். இவர் வேலை செய்யும் இடத்திற்கு செல்லும் போது, வெயில் மற்றும் தூசியில் இருந்து தாடியை பாதுகாக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் இவர் கவனித்து கொள்வதாக கூறியுள்ளார்.