கேரள மாநிலம் திரிச்சூரை அடுத்த மன்னுத்தி பகுதியை சேர்ந்தவர் 69 வயதான ஜான்சன். இவருக்கு சாரா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவரது மூத்த மகன் தனியாக வசித்து வரும் நிலையில், இவரது இளைய மகன் ஜோஜி தனது குடும்பத்தோடு ஜான்சனுடன் வசித்து வருகிறார். 40 வயதான ஜோஜிக்கு, லிஜி என்ற மனைவியும், 12 வயதான டெண்டுல்கர் என்ற மகனும் உள்ளார். கொத்தனாராக வேலை செய்து வந்த ஜோஜி, கேரள வேளாண் பல்கலைக்கழகத்தில் செக்யூரிட்டியாக ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்தும் வந்துள்ளார். ஜோஜியின் மனைவி லிஜியும் அதே பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றியுள்ளார். இவர்களின் மகன் டெண்டுல்கர், தாலிகோட்டில் உள்ள பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் தனது அண்ணனுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்து செட்டில் செய்த ஜோஜி, தனது பெற்றோர் வசிக்கும் வீட்டை தனக்கு எழுதி தரும்படி கேட்டுள்ளார். இதனால் அடிக்கடி ஜோஜிக்கும் அவரது தந்தைக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மகன் மீது ஜான்சன் கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், தனது மகனை அவரது குடும்பத்தோடு படுக்கையறையில் வைத்து பூட்டிய ஜான்சன், ஜன்னல் வழியாக பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதையடுத்து ஜோஜி, அவரது மனைவி லிஜி மற்றும் மகன் டெண்டுல்கர் ஆகிய 3 பேரும் தங்களை காப்பாற்றும்படி கதறியுள்ளனர். இவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், 3 போரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் ஜோஜியும் அவரது மகனும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், லிஜி பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார். மகனுக்கு குடும்பத்தோடு தீ வைத்துவிட்டோம் என்ற குற்ற மனசாட்சியோடு இருந்த ஜான்சன், விஷம் குடித்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.