இளைஞர் ஒருவரை ஆபாச பட நடிகை ஒருவர் பிளாக் மெயில் செய்ததால், மனமுடைந்த அந்த நபர் குடும்பத்துடன் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் தான் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. குடும்பத்துடன் விஷம் குடித்த நபர் ஆஷி கான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நபர் சில காலம் மும்பையிலும் துணி வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது தான் இவருக்கு முதலில் பிரச்சனை தொடங்கியுள்ளது. இதையடுத்து தான் வேறு வழியின்றி விஷயத்தைக் குடிப்பதாக அந்த வீடியோவில் உருக்கமாகப் பேசியுள்ளார். அவருடன் அவரது தாய் மற்றும் மனைவி இணைந்து விஷயத்தைக் குடித்துள்ளனர். விஷம் குடிக்கும் முன்பு, அந்த நபர் தனக்கு என்ன நேர்ந்தது என்பதையும் விளக்கியுள்ளார்.
அந்த வீடியோவில் ஆஷி கான், “எனது பெயர் ஆஷி கான். நான் உஜ்ஜயினியில் உள்ள லோஹே புல்லில் வசித்து வருகிறேன். இந்த வீடியோவில் என்னுடன் இருப்பவர்கள் என் தாய் மற்றும் மனைவி. மும்பையைச் சேர்ந்த ரிம்ஜிம் தாஸ் என்ற ஆபாச நடிகை என்னை மிரட்டித் தொடர்ந்து பணம் கேட்டு வருகிறார். நான் பணத்தைக் கொடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுகிறார். என் திருமணத்தின் போது, வேறு வழியின்றி நான் அவருக்குப் பணம் கொடுத்தேன். இப்போது கூடுதலாகப் பணம் கேட்டு மிரட்டுகிறார். நான் சில காலம் மும்பையில் வேலை செய்து வந்தேன். அப்போது என்னை திட்டமிட்டு பலாத்கார வழக்கில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்பினார். அங்கிருந்த வந்த பிறகும், என்னை பிளான் போட்டு உஜ்ஜயினி சிறைக்கும் அனுப்பினார். தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டுகிறார். நான் ஏன் பணம் தர வேண்டும் எனக் கேட்டால், கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுகிறார். இனியும் இப்போது, என்னால் அவருக்குப் பணம் கொடுக்க முடியாது. இதன் காரணமாக நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம்” என்று அவர் அதில் கூறுகிறார்.
இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர். 3 பேரும் இப்போது ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் சற்று தேறிய பிறகு அவர்களிடம் வாக்குமூலம் பெறப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த நபர் வீடியோவில் கூறியது உண்மையாக இருந்தால் உரிய விசாரணை நடத்தப்பட்டுச் சம்மந்தப்பட்ட பெண் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.