பெங்களூருவை சேர்ந்த அஷ்வினி என்ற பெண் ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணத்தை எடுத்து விட்டு வெளியே செல்லாமல் கதவின் அருகே நின்றுள்ளார். இதனை கவனித்த ஏடிஎம் மையத்தின் காவலாளியான கிருஷ்ணய்யா, “ஆன்டி, பணத்தை எடுத்து விட்டு ஏன் இங்கே நிக்கிறீங்க, மற்றவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நில்லுங்க” என்று அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளார். இப்படி அந்த பெண்ணிடம் பேசும் போது ஒரு மரியாதைக்காக “ஆன்ட்டி” என அந்த காவலாளி கூறிவிட்டார். இதனால் கடும் ஆத்திரமடைந்த அந்தப் பெண், காவலாளி கிருஷ்ணய்யாவை வார்த்தைகளால் வறுத்தெடுத்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் தனது செருப்பால் அந்த அப்பாவி காவலாளியை தாக்கியுள்ளார்..
இதனை அந்த ஏடிஎம் மையத்தில் நின்றிருந்த மற்றவர்கள் பார்த்து விட்டு, சம்பவத்தை குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட காவலாளி கிருஷ்ணய்யாவும் காவல்துறையிடம் இது குறித்து புகார் அளித்திருக்கிறார். புகாரின் பேரில், மல்லேஸ்வரம் காவல் நிலைய போலீசார் காவலாளியை தாக்கிய அஸ்வினி என்ற பெண் மீது வழக்குப் பதிவு செய்து, அந்தப் பெண் மனரீதியாக பாதிக்கப்பட்டவரா எனவும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.