தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சுவாமி சன்னதி தெருவை சேர்ந்தவர் 41 வயதான மாரியப்பன். ஓட்டல் தொழிலாயான இவருக்கு கனகா என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் 1 மகனும் உள்ளனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 5.30 மணிக்கு, மாரியப்பன் தனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிரப்புவதற்காக வெளியே சென்றுள்ளார். வெளியே சென்ற அவர், வீடு திரும்பவில்லை. மேலும், அவர் புளியங்குடி அருகே உள்ள திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். சம்பவம் குறித்து மாரியப்பன் தாயார் பழனியம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், வாசுதேவநல்லூர் அக்ரஹாரம் சந்து தெருவை சேர்ந்த 24 வயதான விக்னேஷ் என்பவர் மாரியப்பனை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. திருமணம் ஆகாத விக்னேஷ், பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். வீடுகளுக்கு சென்று பால் விற்பனை செய்யும் போது, இவருக்கும் மாரியப்பன் மனைவி கனகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. மாரியப்பன் அதிகாலை 5 மணிக்கு ஓட்டலுக்கு வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் தான் தினமும் வருவார்.
இந்த சந்தர்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கனகா, அந்த வாலிபருடன் வீட்டில் தனிமையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கனகாவும், விக்னேசும் வீட்டில் தனிமையில் உல்லாசமாக இருந்ததை திடீரென வீட்டுக்கு வந்த மாரியப்பன் பார்த்து விட்டார். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த அவர், 2 பேரையும் கண்டித்துள்ளார். மேலும், மாரியப்பன் விக்னேஷுக்கு கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்து விடுமாறும் கூறியுள்ளார். இதனால் விக்னேஷ் ஆத்திரம் அடைந்த நிலையில், கனகாவும் தனது கள்ளக்காதலனை பார்க்க முடியவில்லை என்ற கோவத்தில் இருந்துள்ளார். இதையடுத்து விக்னேசை செல்போனில் தொடர்பு கொண்ட கனகா, மாரியப்பன் இருக்கும் வரை நாம் உல்லாசமாக இருக்க முடியாது அதனால் அவரை கொலை செய்து விடலாம் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, அதிகாலையில் மாரியப்பனுக்கு போன் செய்த விக்னேஷ், புளியங்குடி பகுதியில் தான் கடனாக வாங்கிய பணத்தை திருப்பி தந்துவிடுவதாக கூறியுள்ளார். அதனை நம்பிய மாரியப்பன் வீட்டில் இருந்து புறப்பட்ட நிலையில், நவாசாலை பகுதியில் நின்று கொண்டிருந்த விக்னேஷ், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாரியப்பனை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். பின்னர் அவரும் ஏதும் தெரியாதது போல் வீடுகளுக்கு பால் ஊற்ற சென்றுவிட்டார். ஆனால் இருவரும் எதுவும் நடக்காதது போல் இருந்துள்ளனர். மாரியப்பன் குடும்பத்தினர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், போலீசார் விக்னேசை விசாரித்த போது உண்மை தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் கனகாவையும், விக்னேஷையும் கைது செய்தனர்.