நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் முழு வீச்சில் இறங்கியுள்ளது. திமுக கூட்டணியில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் குழுக்களை அறிவித்துள்ளன. திமுக கூட்டணியில் விரைவில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படும் என தெரிகிறது. திமுக கூட்டணியில் தற்போது காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக, கொமதேக, முஸ்லிம் லீக் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
அதேநேரத்தில் திமுக கூட்டணியில் பாமக, மநீம இணைந்தால் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு பார்முலாவில் மாற்றம் வரும். இது திமுக கூட்டணியில் கடும் விவாதங்களை ஏற்படுத்தும். இந்நிலையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவும், திமுக கூட்டணியில் இணைவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கமல்ஹாசன் கட்சி இணைந்தால் கோவை தொகுதியை கேட்டுப் பெறுவார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், கோவை தொகுதியை எளிதாக இடதுசாரிகள் விட்டுத்தரப்போவதில்லை எனவும் கூறப்படுகிறது.