மணிப்பூரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 2 பெண்கள் விவகாரத்தை குறிப்பிட்டு இந்தியாவில் உள்ள அனைத்து மகள்களையும் பாதுகாக்க வேண்டும் என்கிறீர்களா அல்லது யாரையும் பாதுகாக்க வேண்டாம் என்கிறீர்களா? என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
மணிப்பூர் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட 2 பெண்கள், சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக் கோரி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட், மே 4ஆம் தேதி நடந்த சம்பவத்திற்கு மே 18ஆம் தேதி வரை வழக்குப்பதிவு செய்யாமல் இருந்தது ஏன் என மாநில அரசுக்கு கேள்வி எழுப்பினார். மேலும், இது நிர்பயா வழக்கைப் போன்று தனி ஒரு கும்பலால் நிகழ்த்தப்பட்ட வன்முறை அல்ல என்றும், இது ஒரு கட்டமைக்கப்பட்ட சமூக ரீதியிலான வன்முறை என்றும் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட மெய்தி தரப்பு வழக்கறிஞர், மணிப்பூர் விவகாரம் போன்று மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த குற்ற சம்பவங்களை மேற்கோள் காட்டி பேசியுள்ளார். இதுபோன்ற வன்முறை வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருவதாக கூறினார். இதற்கு வன்மையான கண்டனத்தை பதிவு செய்த தலைமை நீதிபதி, அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன எனக்கூறி, மணிப்பூர் சம்பவத்தை நியாப்படுத்த முடியாது என்றும் இந்தியாவில் உள்ள அனைத்து மகள்களையும் பாதுகாக்க வேண்டும் என்கிறீர்களா அல்லது யாரையும் பாதுகாக்க வேண்டாம் என்கிறீர்களா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இது நிர்பயா சம்பவத்தை போல தனிப்பட்ட ஒன்று அல்ல. திட்டமிடப்பட்ட வன்முறை எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.