மாண்டஸ் புயல் காரணமாக 5-க்கும் மேற்பட்ட வீடுகள் திடீரென இடிந்து விழுந்து கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன.
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தீவிரம் அடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதுச்சேரிக்கு உட்பட்ட பிள்ளைச்சாவடி மீனவர் கிராமம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. இங்கு 500 குடும்பங்களை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். அதிலும் பிள்ளைச்சாவடி மீனவ கிராமம் என்பது அடிக்கடி கடல் அரிப்பு ஏற்படக்கூடிய பகுதியாகும். இதனால் தங்கள் பகுதிக்கு தூண்டில் வளைவு அமைத்து கொடுக்க வேண்டும் எனவும் தற்காலிகமாக கற்களை கொட்டி கடல் அரிப்புக்களை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அரசுக்கு இப்பகுதி மக்கள் அதிகமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், இது சம்பந்தமாக தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக இப்பகுதியில் கடல் சீற்றம் அதிகளவில் இருந்து வருகிறது. வழக்கமாக 4 அடி உயரம் எழும் அலைகள், தற்போது 12 அடி உயரத்திற்கு எழும்பி வருகிறது. இதன் காரணமாக 5-க்கும் மேற்பட்ட வீடுகள் திடீரென இடிந்து விழுந்து கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன. வீடுகளில் உள்ள பொருட்களை இழந்த மக்கள் தற்போது தவித்து வருகின்றனர். அடுத்தடுத்து வீடுகள் இடிந்து விழும் அபாயம் இருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதேபோல் காரைக்கால் மேடு, கிளிஞ்சல் மேடு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் கடல் அரிப்பால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் காரைக்கால் துறைமுகத்தில் 5ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.