சின்னத்திரை நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து (வயது 56), எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வந்ததன் மூலம் மிகவும் புகழ் பெற்றவராக மாறினார். இவரின் நடிக்கும் விதம், உடல் மொழி, முக பாவனை உள்ளிட்டவைகளால் ரசிகர்கள் வட்டத்தை சேர்த்து வைத்திருந்தார். இவரது நடிப்பு எதிர்நீச்சல் சீரியலை பெரும் உச்சத்துக்கே கொண்டு சென்றது.
இவர், தேனி மாவட்டம் பசுமலை பகுதியைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் வைரமுத்துவின் உதவியாளராக சேர்ந்தார். இயக்குநர்கள் வசந்த், ராஜ்கிரண், சீமான், மணிரத்தினம், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோரிடம் உதவி இயத்குநராக பணியாற்றியுள்ளார். இவர் அரண்மனை கிளி, என் ராசாவின் மனசிலே படத்தில் உதவி இயக்குநராக இருந்தார். ஆசை உள்ளிட்ட படங்களிலும் இயக்குநர் வசந்திற்கு உதவி இயக்குநராக இருந்தார். இந்நிலையில், இவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மாரிமுத்துவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி” என தெரிவித்துள்ளார். மாரிமுத்து, ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரஜினிகாந்த் உடன் பயணிக்கும் சில காட்சிகளிலும் மாரிமுத்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.