கனடா தேசிய தேர்தலில், மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. கடந்த மாதங்களில் கட்சி பெரும் நெருக்கடியில் சிக்கி இருந்தபோதும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மிரட்டல்களால் தேர்தல் களத்தில் திருப்பம் ஏற்பட்டது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கனடாவின் பொருளாதாரத்தை தாக்குவேன் என்றும், கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற்றுவேன் என்றும் வெளியிட்ட அதிரடி வார்த்தைகள், கனடியர்களிடையே தேசிய உணர்வை தூண்டியது. இதனால், தேர்தலின் ஒட்டுமொத்த சூழ்நிலையும் மாறி, லிபரல்களுக்கு ஆதரவு பெருகியது. இதன் விளைவாக, அவர்கள் நான்காவது முறையாக ஆட்சி அமைக்கும் நிலைமையை பெற்றுள்ளனர்.
வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகிய பிறகு, லிபரல் கட்சி கனடா பார்லிமென்ட் தொகுதிகளில் அதிகமான இடங்களை கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், முழுமையான ஆட்சியை நடத்த தனிப்பட்ட பெரும்பான்மை கிடைத்ததா என்பது இன்னும் தெளிவாகவில்லை. அந்நாட்டு முன்னாள் நிதியமைச்சர் டேவிட் லமெட்டி கூறுகையில், டிசம்பரில் எங்கள் நிலை மோசமாக இருந்தது. இன்று ஆட்சி அமைக்க தயாராக உள்ளோம். இந்த மாற்றத்துக்குக் காரணம் மார்க் கார்னி தான், என்றும் அவர் வலியுறுத்தினார்.
மறுபுறம், கனடா எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லிவ்ரே, தேர்தலை முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குறைகள் மீது மையப்படுத்த முயன்றார். உணவுப் பொருட்கள் மற்றும் வீட்டு வாடகை விலையேற்றம் காரணமாக ட்ரூடோவின் புகழ் குறைந்திருந்தது. போய்லிவ்ரே, ட்ரம்ப் தொடர்பாக கடுமையான நிலைப்பாடு எடுக்கத் தவறியதாகவும் விமர்சிக்கப்பட்டார். தேர்தல் முடிவுக்கு சில மணி நேரங்கள் முன்பு, அவர், “ட்ரம்ப் அவர்களே, எங்கள் தேர்தலில் தலையிடாதீர்கள். கனடாவின் எதிர்காலத்தை கனடா மக்களே முடிவு செய்வார்கள்,” என்று சமூக ஊடகங்களில் பதிவு செய்திருந்தார்.
இன்னொரு புறம், வான்கூவர் நகரில் நடந்த கடும் தாக்குதலால் நாடு அதிர்ச்சியில் இருந்த நிலையில் தேர்தல் நடந்தது. இந்த தாக்குதல் தீவிரவாதம் தொடர்பானது அல்ல என்றும், தாக்குதலாளர் மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.