Mark Zuckerberg: பேஸ்புக்கின் இணை நிறுவனராக இருக்கும் மார்க் ஜுக்கர்பெர்க் அடிக்கடி அணிந்திருந்த ஒரு கருப்பு நிற ஹூடி ஒன்று லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் நடந்த ஏலத்தில் 15,875 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்புக்கு 14 லட்சம் ரூபாய் ஆகும். இந்த ஆடை “ஆல்டர்நேட்டிவ்” என்ற பிராண்டைச் சேர்ந்தது. 2010-ஆம் ஆண்டில், மார்க் ஜுக்கர்பெர்க் டைம் என்ற பத்திரிகை நிறுவனத்தால் “இந்த ஆண்டின் சிறந்த மனிதர்” என்று தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த சமயத்தில், அவர் இந்த ஆடையை அடிக்கடி அணிந்திருந்தார்.
நியூயார்க் போஸ்ட் அறிக்கையின்படி, இந்த ஆடையை ஏலத்தில் பெற்ற புதிய உரிமையாளருக்கு தன் கையால் எழுதிய ஒரு குறிப்பையும் மார்க் ஜுக்கர்பெர்க் அனுப்பியுள்ளார். “அதில் எனக்கு பிடித்த பழைய பேஸ்புக் ஹூடிகளில் இதுவும் ஒன்று. ஆரம்ப நாட்களில் இதை நான் அடிக்கடி அணிந்திருந்தேன்” என்று எழுதி அனுப்பியுள்ளார்.
ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட பிற பிரபலமான பொருட்களில் ஸ்டீவ் ஜாப்ஸ் அணிந்திருந்த சிக்னேச்சர் பௌ டையும் ஒன்று. பலரும் கோட் சூட் போடுகையில் பௌ டை அணிந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். இது 35,750 டாலருக்கு ஏலம் போயுள்ளது. இது இந்திய மதிப்புக்கு சுமார் ரூ. 31 கோடியாகும். இது இவர் வாங்கிய 1,000 டாலரை விட 35 மடங்கு அதிகம் என்றே சொல்லலாம்.
இந்த பௌ டை 1984 மற்றும் 1983-ஆம் ஆண்டுகளில் ஸ்டீவ் ஜாப்ஸ் பல விழாக்களில் பயன்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு கும்பமேளா பிளான் குறித்த ஸ்டீவ் ஜாப்ஸ்-இன் கடிதம் ரூ.4.32 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. ஸ்டீவ் ஜாப்ஸ்-இன் கையால் எழுதப்பட்ட கடிதம் இதுவாகும். ஏலத்தில் விடப்பட்ட தனிப்பட்ட கடிதமாக இது வரலாற்றை படைத்துள்ளது. இதன் மதிப்பு 5,00,312.50 அமெரிக்க டாலர்கள் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஏலத்தில் இருந்து கிடைக்கும் அனைத்து வருமானமும் டெக்சாஸில் உள்ள பள்ளி மாணவர்களை ஆதரிப்பதற்காக அர்ப்பணிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.