உத்தரப் பிரதேசத்தில் பழமையான கிணறு ஒன்றுக்கும் அதன் அருகில் உள்ள தோட்டத்திற்கும் கிராம மக்களால் திருமணம் நடத்திவைக்கப்பட்ட சம்பவம் சுவாரஸியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள கைசர்கஞ்ச் பகுதியில் கடந்த சில வருடங்களாக வறட்சியுடன் இருப்பதாகவும் அந்த கிணற்றில் தண்ணீர் வறண்டு போனதால் விவசாயம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது கெட்ட சகுனமாக பார்க்கப்பட்ட நிலையில் அந்த கிணற்றுக்கு திருமணம் செய்து வைத்தால் கிணற்றில் தண்ணீர் வந்துவிடும் என்று கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது. அடுத்து கிணற்றுக்கும் அருகில் உள்ள தோட்டத்திற்கும் திருமணம் செய்து வைக்க கிராமத்தினர் முடிவு செய்தனர் பத்திரிகைகள் பிரமாண்டமாக அடிக்கப்பட்டது என்பதும் நிஜத் திருமணத்திற்கு நடத்தப்படுவது போன்ற அலங்காரங்கள் இசை நிகழ்ச்சிகள் அறுசுவை வகை சாப்பாடு ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டன. அதன்படி, அந்த கிணற்றுக்கு குவான் என்றும் தோட்டத்திற்கு பாகியா என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
துணை ஆட்சியர் மகேஷ் குமார் கைதல் முன்னிலையில் நடைபெற்ற இந்த திருமணத்தில், பந்தல் போடப்பட்டு விஐபிகள் உட்பட 400 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டனர். மேலும் இதில் நிஜ திருமணங்களை போல் நடனம் மற்றும் இசை முதல் சடங்குகள் வரை அனைத்தும் நடத்தப்பட்டன.பெண் வீட்டார் சார்பிலும் மாப்பிள்ளை வீட்டார் சார்பிலும் நடத்த வேண்டிய சடங்குகளும் நடத்தப்பட்டன. இந்த திருமணத்திற்கு பிறகு வந்திருந்த அனைவருக்கும் சாப்பாடு பரிமாறப்பட்டது. இந்த கிராம மக்களின் நம்பிக்கையாக கருதப்படும் இந்த திருமண விழா அனைவரிடமும் சுவாரஸியத்தை ஏற்படுத்தியது.