ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையை சேர்ந்தவர் இளவரசன். இவர், கடந்த ஏப்ரல் மாதம் ஒரு பெண்ணை சுயமரியாதை திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து, அப்பெண்ணின் பெற்றோர் உயர்நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீத்மன்றம், வழக்கறிஞர்கள் முன்பு நடைபெற்ற திருமணம் செல்லாது என்று தெரிவித்தது.
மேலும், மனுதாரருக்கு சுயமரியாதை திருமணம் நடந்ததாக சான்றழித்த வழக்கறிஞர் உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு பார் கவுன்சில் தரப்பில் நோட்டீஸ் அளித்து விளக்கம் பெற உத்தரவிட்டது. இதுபோன்று திருமணம் நடைபெற்றதாக யாரெனும் சான்றிதழ் வழங்கினால் அவர்களுக்கும் நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து இளவரசன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. விசாரணையின்போது, இளவரசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்து திருமண சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகள் குறித்து வாதிட்டார். குறிப்பாக, இரு இந்துக்கள் இடையே உறவினர்கள் முன்னிலையில் அல்லது நண்பர்கள் முன்னிலையில், பிற நபர்கள் முன்னிலையில் நடைபெறக்கூடிய திருமணம் தான் திருமணம் என இந்து திருமண சட்டம் குறிப்பதாக தெரிவித்தார்.
இந்த வாதத்தை ஏற்ற உச்சநீதிமன்றம், இந்து திருமண சட்டத்தின் படி வழக்கறிஞர்கள் முன்பு நடைபெற்ற திருமணம் செல்லாது என்ற உயர்நீதிமன்ற கிளை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், வழக்கறிஞர்கள் அலுவலகத்தில் நடைபெறும் சுயமரியாதை திருமணங்கள் செல்லும் என்றும் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.