பலதார திருமணம் செய்வது குறித்த பல பதிவுகள் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து பதிவிடப்பட்டு வந்தாலும், ‘உலகில் இப்படியெல்லாம் மக்கள் இருப்பார்களா’ என்ற அதிர்ச்சியும் திகைப்புமே எப்போதும் நெட்டிசன்களுக்கு ஏற்படும் உணர்வாக இருக்கிறது. அப்படியான ஒரு நிகழ்வுதான் பாகிஸ்தானில் அரங்கேறியிருக்கிறது. அதன்படி, பாகிஸ்தானைச் சேர்ந்த 60 வயது முதியவர் தன்னுடைய வாழ்நாளில் 100 முறை திருமணம் செய்ய வேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டிருக்கிறார். இதுவரை தன்னுடைய பேத்தி வயதில் இருக்கும் பெண்களை 26 முறை திருமணம் செய்திருக்கும் இவர், 22 பேரை விவாகரத்தும் செய்திருக்கிறார்.
ஒவ்வொரு பெண்களிடமிருந்தும் தனக்கான குழந்தை பிறந்ததும் அவர்களை பகிரங்கமாக விவாகரத்து செய்வதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறார் இந்த முதியவர். தற்போது 4 மனைவிகளுடன் வாழ்ந்து வரும் இவர், “அந்த 4 பேருக்கும் குழந்தை பிறந்ததும் அவர்களை விட்டு விலகிடுவேன்” என வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ, தற்போது பாகிஸ்தான் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. Jyot Jeet என்ற ட்விட்டர் பயனரொருவர் பகிர்ந்துள்ள வீடியோவில், அந்த 60 வயது முதியவர் 19 முதல் 20 வயது வரை உள்ள மனைவிகளுடன் அமர்ந்து பேசுகிறார். அதில்தான் தன்னுடைய ஆசையை கூறியிருக்கிறார்.
அதன்படி வீடியோவில், “இந்த திருமணங்கள் அனைத்தையும், குழந்தைகளை பெறுவதற்காக மட்டுமே செய்தேன்” என்று கூறியதோடு, “நான் மணக்கும் பெண்களும், குழந்தை பெற்றுக் கொடுத்ததும் என்னை விட்டு பிரிந்து விட பூரணமாக சம்மதிக்கின்றனர்” என சொல்லியிருக்கிறார். இதுபோக, வாழ்க்கையின் மிச்ச சொச்ச நாட்களுக்குள் ஒட்டுமொத்தமாக 100 பெண்களை மணந்து அந்த 100 பேரையும் விவாகரத்து செய்வதையே லட்சியமாக கொண்டிருக்கிறார். இதுவரை இவருக்கு 22 குழந்தைகள் இருக்கிறார்களாம். அந்த 22 பேரும் அம்மாக்களுடனேயே வசித்து வருகிறார்களாம். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், விவாகரத்து கொடுக்கப்பட்ட பிறகு அந்த பெண்களுக்கென வீடு, சொத்து என எல்லாம் பிரித்தும் கொடுத்திருக்கிறார் இந்த முதியவர். இப்படி குழந்தைக்காக மட்டுமே திருமணம் செய்வதாகவும், இதை ஒரு பொழுதுபோக்குக்காகவே செய்வதாகவும் அந்த முதியவர் கூறியதை கேட்ட நெட்டிசன்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றனர்.